ஜனாதிபதி பதவி வேண்டாம் மாயாவதி

by Staff / 28-03-2022 11:53:32am
ஜனாதிபதி பதவி  வேண்டாம் மாயாவதி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அந்தப் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் ஜனாதிபதி பதவியை பாஜக உங்களுக்கு தந்தால் ஏற்பீர்களா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார், அதற்கு மாயாவதி “பாஜகவிடம் பதவியைப் பெற்றால் எங்கள் கட்சியின் முடிவிற்கு அது காரணமாக அமைந்துவிடும் என்று தெரிந்திருக்கும் நிலையில், நான் எப்படி அத்தகைய பதவியை ஏற்க முடியும்.

எனவே, எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தின் நலன் கருதி, பாஜக தரும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் ஏற்கமாட்டேன் என்பதை ஒவ்வொரு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிஜேபி அல்லது பிற கட்சிகளிடம் ஜனாதிபதி பதவியை பெற்றால், எதிர்காலத்தில் அவர்கள் என்னை தவறாக வழிநடத்தக்கூடும்” என்று கூறினார்.

மாயாவதி, தான் கன்ஷி ராமின் உறுதியான சீடர் என்றும், அவர் கடந்த காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பு தன்னை தேடி வந்தபோது அந்த வாய்ப்பை மறுத்ததாகவும் கூறினார்.தனது வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த செலவிடுவேன் என்றும், கட்சி உறுப்பினர்கள்  சோர்வடைய வேண்டாம் என்றும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

உ.பி.யில் தனது கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர, அனைத்து சாதிய, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் கடுமையான போராட்டத்திற்கும் மோதலுக்கும் தயாராகி வருவதாக மாயாவதி கூறினார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள 403 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி பெற்றிருந்தது.

 

Tags :

Share via