கல்யாண வயது 21: பெண்களின் கருத்து மழை
ஆண்- பெண்களின் திருமண வயது ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அது நடைமுறைக்கு வரும்போது ஆண்களின் திருமண வயது போன்று பெண்களின் திருமண வயதும் 21 ஆகிவிடும். தங்களின் திருமண வயது 18-ல் இருந்து 21-க்கு உயர்வது பற்றி பெண்களின் கருத்து மழை:
சந்திரா லட்சுமணன் (சென்னையை சேர்ந்தவர். கலைத்துறையில் இருப்பவர் எனக்கு 36 வயது. திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் நான் எவ்வளவோ சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். ‘நான் இறப்பதற்கு முன்பு உன் திருமணத்தை பார்த்தே ஆகவேண்டும்’ என்று என் பாட்டி கட்டாயப்படுத்தினார். பாட்டி நீங்கள் இறந்துபோவீர்கள். ஆனால் நான் வெகுகாலம் வாழவேண்டும் அல்லவா என்று எதிர்கேள்வி கேட்டு என் பாட்டியிடம் இருந்து தப்பித்தேன்.
18 வயதில் பெண்களுக்கு பக்குவம் இருக்காது. 21 வயதிலும் அதற்குரிய பக்குவம் வருமா என்று தெரியவில்லை. திருமண வயதை குறைந்தது 25 ஆக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. பெண்கள் நினைப்பது போன்ற, அவர்களுக்கு ஏற்ற வரன் கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ளவேண்டும். திருமண வயதில் பெண்களுக்கு காலாவதி என்பது ஒருபோதும் இல்லை. திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் எத்தனை வயதிலும் அதை செய்துகொள்ளலாம்.”
பி.எஸ்.ஜினா (இந்திய பெண்கள் கூடைப்பந்து அணி முன்னாள் கேப்டன்): “நான் விளையாட்டுத்துறையில் இருந்ததால் விரைவாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை. 26-வது வயதில் திருமணம் செய்துகொண்டேன். சுயமாக சம்பாதிக்கத் தொடங்கிய பின்பே பெண்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள்கூட திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிடுவது கவலைக்குரிய விஷயம்தான். திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கை என்று சிந்திக்கும் மனநிலை முதலில் மாறவேண்டும். பெண்களின் திருமண வயதை 21 ஆக்கினால் அவர்கள் பட்டப்படிப்பை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இது மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறியாக இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.”
பி.ஜெ.பிரீட்டி (அமெரிக்காவில் வசிப்பவர்): “பெண்கள் சொந்தக் காலில் நிற்கும் காரியத்திலும், திருமணத்தை பற்றி தீர்மானம் எடுக்கும் விஷயத்திலும் நாம் அமெரிக்கர்களை பின்பற்றுவது நல்லது. இங்கு 15 வயதைக் கடந்தவர்கள் தாங்களே சம்பாதித்துதான் படிக்கவேண்டும். வேலை, திருமணம் போன்ற எல்லா முடிவுகளையும் சுயமாக அவர்களே எடுத்தாக வேண்டும்.
அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் அவர்களே தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆகிவிட்டால், அவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் கூடுதல் தெளிவு ஏற்படும். அது பெண்கள் சமூகத்திற்கு நல்லதுதான்.”
வி.பி.மன்சியா (ஆராய்ச்சி மாணவி): “நான் கேரளாவில் மலபுரம் பகுதியை சேர்ந்தவள். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என் தோழி திருமணமாகி என்னோடு படித்துக்கொண்டிருந்தாள். கடைசி பரீட்சை எழுத அவள் நிறைமாத கர்ப்பிணியாக வந்த காட்சி இப்போதும் என் மனதில் இருந்துகொண்டிருக்கிறது.
பெண்ணுக்கு எப்போது 18 வயது ஆகும் என்று, திருமணம் செய்து வைக்க காத்திருக்கும் பெற்றோரையும் நான் பார்த்திருக்கிறேன். 17, 18 வயது டீன்ஏஜ் பெண்கள் தங்கள் திருமணத்தை எதிர்க்கவும் தைரியமற்றவர்களாகவே இருக்கிறார்கள். திருமண வயது 21 ஆகிவிட்டால் திருமணம், வரனை தேர்ந்தெடுப்பது போன்றவைகளில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பலாம்.”
சகி எல்சா (சினிமா ஆடை வடிவமைப்பாளர்): “எந்த வயதில் திருமணம் செய்துகொள்ளவேண்டும்-யாரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவினை பெண்கள்தான் எடுக்கவேண்டும். திருமணம் செய்துகொள்ளாமலே வாழவும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவதைவிட சிறுவயது திருமணத்தை தடுப்பது முக்கியமானது. அதோடு கட்டாய திருமணத்தையும் தவிர்த்தாகவேண்டும். அரியானா போன்ற மாநிலங்களில் கட்டாய திருமணத்திற்காக பெண்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குகிறார்கள். கணவரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது, குழந்தைகளை பெற்றெடுப்பதுமே அவர்களது வேலையாக இருக்கிறது.
கணவரின் சொத்துகளிலோ, குடும்பத்திலோ அத்தகைய பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. கணவர் இறந்துவிட்டால் அத்தகைய பெண்கள் அனாதைகள் போல் ஆகிவிடுவார்கள். இதுபோன்ற கஷ்டநிலைகளில் இருந்தும் பெண்கள் காப்பாற்றப்படவேண்டும்
Tags :