தினசரி கொரோனா பாதிப்பு 10 நாளில் 27 சதவீதம் குறைவு : மத்திய அரசு சுகாதாரத்துறை இணை செயலர்

தினசரி கொரோனா பாதிப்பில் உச்ச நிலையான 4.14 லட்சம் (மே 7-ல் பதிவானது) என்ற நிலையைவிட, 10 நாட்களில் 27 சதவீதம் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மே 3ம் தேதி கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 81.7 சதவீதமாக இருந்த நிலையில், அது இப்போது 85.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கான டிஸ்சார்ஜ் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோர் விகிதம் 14.10 சதவீதமாக உள்ளது.இந்தியாவில் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். 10 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர், 18 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1.8 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 7-ம் தேதி தான் அதிகளவாக 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளன. இது உச்சக்கட்ட பாதிப்பை விட 27 சதவீதம் குறைவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :