திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம். 

by Staff / 07-07-2025 09:55:35am
திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம். 

 திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆலயம்  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆலயத்தில்  16 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 

கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.கடந்த 1-ம் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12 வது கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், 164 அடி உயர ராஜகோபுரத்தில் ஒன்பது கும்ப கலசங்கள், சண்முகர் ராஜ கோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், மூலவர், சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. குடமுழக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 6000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 


 

திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம். 
 

Tags : Maha Kumbabhishekam in Tiruchendur after 16 years

Share via