நீச்சலில் சாதனை புரிந்த இளைஞருக்கு ரயில்வேயில் வேலை

by Editor / 10-04-2022 05:53:32pm
நீச்சலில்  சாதனை புரிந்த இளைஞருக்கு ரயில்வேயில்  வேலை

விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி மதுரை கோட்டத்தில் நீச்சல் போட்டிகளில் சாதனை புரிந்த திருநெல்வேலி பெருமாள்புரம் நீச்சல் குளம்  தெருவைச் சேர்ந்த எமில் ராபின் சிங் கிற்க்கு ரயில்வே வேலை வழங்கப்பட்டது.

இவரை ஐந்து வயது முதல்  நீச்சல் போட்டிகளில் பழக்கிய இவரது தந்தை தங்கதுரை ஒரு ஓய்வு பெற்ற பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆவார். பள்ளி ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீச்சல் விளையாட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். 

இவர் இதுவரை தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் 300 நீச்சல் குளங்களை கட்டுவதற்கு உதவி புரிந்துள்ளார். மதுரையில் மட்டும் இருபத்தி இரண்டு நீச்சல் குளங்கள் பரவை, பரளி, விராட்டிபத்து, பெருங்குடி, துவரிமான், ஒத்தக்கடை, மூன்றுமாவடி, வலையங்குளம், அழகர் கோவில் போன்ற பகுதிகளில் தனியார் அமைப்புகள் மற்றும் நகர் பகுதி ஹோட்டல்களில் நீச்சல் குளங்களை கட்ட உதவி புரிந்துள்ளார்.

எமில் ராபின் சிங் தேசிய அளவில் 400 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல், பின்புற நீச்சல், நெஞ்சு நீச்சல், ஃப்ரீ ஸ்டைல் என்ற நான்கும் கலந்த மெடிலி நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர். இதைப் பாராட்டும் வகையில் இவருக்கு திருநெல்வேலி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு அலுவலர் பணி வழங்கப்பட்டது. சமீபத்தில் கொல்கத்தாவில் தேசிய அளவில் நடைபெற்ற 61வது ரயில்வே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார். 

இவரது பங்களிப்பு தெற்கு ரயில்வே தேசிய அளவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீச்சல் போட்டிகளில் முதலிடத்தை பிடிக்க உதவியது. சமீபத்தில் இவர் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இவருக்கு நீச்சல் போட்டிகளில் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க மதுரை கோட்டம் உரிய ஒத்துழைப்பு வழங்கும் என கோட்ட மேலாளர் தெரிவித்தார். மேலும் நீச்சல் பயிற்சியை ஊக்குவிக்க மதுரை ரயில்வே குடியிருப்பில் ஒரு நீச்சல் குளம் கட்டும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

 

Tags :

Share via