கொரோனவை தொடர்ந்து மிரட்டல் விடுக்கும்  கருப்பு பூஞ்சை?

by Editor / 24-07-2021 05:21:19pm
 கொரோனவை தொடர்ந்து மிரட்டல் விடுக்கும்  கருப்பு பூஞ்சை?

 


என்னடா புதுசு புதுசா இதுங்க கிளம்புது என பீதியை கிளப்புகிறது.கருப்பு பூஞ்சை என்றும் அழைக்கப்படும் மியுகோர்மைகோகிஸ் தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் (Balck Fungus - கருப்பு பூஞ்சை) எனப்படும் மியுகோர்மைகோகிஸ் (Mucormycosis) தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கணிசமாக இந்த தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மியுகோர்மைகோகிஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 3 பேர் உள்பட 7 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


மியுகோர்மைகோகிஸ் (கருப்பு பூஞ்சை) என்றால் என்ன?
இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது ஒன்றும் புதியதல்ல. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவான போதும் கூட இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் போதும் இது ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை கிருமிகள் சுற்றுப்புறச்சூழலில் எப்போதும் இருப்பவைதான். மனிதர்களின் சளி, கற்று, மண், தாவரங்கள், உணவு, அழுகிய பழங்களில் காணப்படும் பூஞ்சைகளில் இருந்து கருப்பு பூஞ்சை உருவாகிறது. ஆனால், இதன் தீவிரத்தன்மை குறைவுதான்.
யாரை தாக்கும்?

மியுகோர்மைகோகிஸ் நோய்கிருமிகள் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையும், உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அதனால் கிருமிகளை எதிர்கொள்ளும் சக்தி குறைந்தவர்களையும் தாக்குகிறது. இணை நோய்கள் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களை இது அதிகமாக தாக்குகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.


அறிகுறிகள் என்ன?
முகம், மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாக் ஃபங்கஸ் நோயால், சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும். நுரையீரலுக்கும் இது பரவும். சில நேரங்களி்ல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கண்களைச் சுற்றி வலி, சிவப்பு நிறத்தில் தடிப்பு, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்தக்கசிவுடன் வாந்தி, சளியின் நிறமாற்றம் உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.


சிகிச்சை முறை


இந்த கருப்பு பூஞ்சையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கான மருந்து, மாத்திரைகள் உள்ளன. பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் ஸ்டீராய்ட் மருந்து கொடுத்தாலே போதுமானது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதுபோன்ற 2ஆம்நிலை தொற்று வரக்கூடும். ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையின்றியோ, அதிகமாகவோ பயன்படுத்தக் கூடாது. ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்

 

 

 

Tags :

Share via