பாண்டிச்சேரியில் 20பேருக்கு கருப்பு பூஞ்சை - ஆளுநர் பகீர் தகவல்!

by Editor / 22-05-2021 12:27:08pm
பாண்டிச்சேரியில் 20பேருக்கு கருப்பு பூஞ்சை - ஆளுநர் பகீர் தகவல்!

கொரோனாவின் தாக்கத்தையே மக்களால் தாங்கி கொள்ள முடியாத நிலையில் புதிய அபாயமாக கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலேயே அனேக பேருக்குப் பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக பீகாரில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோயும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் கருப்பு பூஞ்சை எட்டிப் பார்த்துள்ளது. இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து அண்டை மாநிலங்களிலும் பரவி வருகிறது. புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர் உட்பட 20 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அவர் பேசியபோது, “தற்போது கருப்பு பூஞ்சை அதிதீவிரமாகப் பரவுகிறது. தொற்று நோயாக இதை அறிவிக்க தயாராகி வருகிறோம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு கண்டறியப்பட்டாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தற்போது வரை புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர் உட்பட 20 நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவரை அணுகுங்கள்” என்றார். தீவிர சர்க்கரை நோய் இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via