சௌந்தரநாயகி உடனுரை அஸ்திரபுரீஸ்வரர்!

by Editor / 24-07-2021 12:56:03pm
சௌந்தரநாயகி உடனுரை அஸ்திரபுரீஸ்வரர்!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டத்தில் ஆனூர் கிராமம் உள்ளது. பாலாற்றை ஒட்டி அமைந்துள்ள இவ்வூர் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் எனப் பலப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த ஊரில் அறநிலையத்துறை சார்ந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சௌந்தரநாயகி உடனுரை அஸ்திரபுரீஸ்வரர் என்னும் சிவன் கோயில் அமைந்துள்ளது.


இங்கே அருள் புரியும் ஈசனுக்கு ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீசௌந்திரவல்லி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
அர்ஜுனன், சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோயில் முன்புறம் குளம் அமைந்துள்ளது. திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கல்தூண் உள்ளது. பலிபீடமும், நந்தி மண்டபமும், அதனை அடுத்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை உள்ளன.


கருவறையுடன் கூடிய முன் மண்டபத்தில் வடக்கு பக்கத்தில் அம்மன் சந்நிதி, தெற்கு நோக்கி உள்ளது. கோயில் தெற்கு பக்க சுவரில், கைகளால் தாளம் போடுவதுபோன்ற விநாயகரின் சிற்பம் புதைத்து வைத்து கட்டப்பட்டுள்ளது. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த விநாயகருக்கு "சங்கீத விநாயகர்' என்று பெயர்.


பிரார்த்தனை: நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் நீங்கவும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழவும், ஆஸ்திகளைப் பெறவும் இங்குள்ள சுவாமியை நெய் தீபம் ஏற்றி வழிபட்டுதல் சிறந்த பரிகாரம் ஆகும்.
மேலும், இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடனைச் செலுத்தலாம்.
இங்கு பிரதோஷம், சிவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. முகப்பில் நான்கு புறங்களிலும் நந்தி, விநாயகர், முருகன் மற்றும் சூலத்துடன் இருக்கிறது தீப ஸ்தம்பம்.


கார்த்திகை தீபத்தன்றும், மாத பெளர்ணமி தினங்களிலும் இந்த தீப ஸ்தம்பத்தில் விளக்கேற்றி வழிபட, பல நன்மைகள் கிட்டும்.
திருப்பணி: தொன்மைச்சிறப்புடன், சரித்திரச் சான்றுகளாக கல்வெட்டுகளுடன் உள்ள இக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்து, செடிகள் முளைத்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.


இதனை அறிந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தேவராஜ் கிராம மக்களை ஒருங்கிணைத்து, கடந்த 2002 -இல் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையைப் பதிவு செய்து, அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றார். பின்னர் திருப்பணிகள் தொடங்கின.
சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கலந்த கலவையில் ஏற்கெனவே இருந்த பழைமை மாறாமல் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. திருப்பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்திடவும், சுவாமி அருள் கிடைக்க முடிந்த உதவிகளைச் செய்யலாம் எனவும் திருப்பணிக் குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via