பாசன நீர்வழித் தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்- சீமான்

by Staff / 04-05-2022 12:50:04pm
பாசன நீர்வழித் தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்- சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மற்றும் தமிழ்நாடு அரசின் செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரிணை கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானி சாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆறுகளிலிருந்து பாசனவசதி தரும் நீர்வழித் தடங்களைக் கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் அறிவியலுக்குப் புறம்பானது.

நீர்வழித் தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்று முழுதாக அற்றுப்போகும் பேராபத்து ஏற்பட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனமும் பெருமளவு பாதிக்கப்படும். மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் முதலிய நீர்நிலைகளை நிரப்புவதற்கான நீரும் போதிய அளவு கிடைக்காமல் போவதோடு, அவை எளிதில் வறண்டு போகும் சூழலும் ஏற்படும்.

இதனை உணர்ந்தே தற்போது தொடர்புடைய பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கான்கிரீட் தளம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே, பல்லுயிர் பெருக்கத்தை அழித்துச் சுற்றச்சூழலையும், விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் கடுமையாகப் பாதிக்கின்ற கொடிய திட்டமான பாசன நீர்வழித் தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 

Tags :

Share via