கொரோனா இறப்புகள் குறைத்து  காட்டப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 25-05-2021 04:21:43pm
கொரோனா இறப்புகள் குறைத்து  காட்டப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டவில்லை என்றும் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடமாநிலங்களில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், தென் மாநிலங்களில் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. நாட்டிலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தமிழகம் திகழ்கிறது. தொற்று பரவலை கட்டுக்கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு தீவிரமாக போராடி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த தகவல்களில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்றும், குறைந்த எண்ணிக்கையே தெரிவிக்கப்படுவதாக வும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிய அளவிலான உயிரிழப்புகளை மறைத்து வெளியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் தமிழக அரசு மீது புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவோ, குறைத்தோ தெரியப்படுத்தவில்லை என்றதுடன், கருப்பு பூஞ்சை தொற்றினால் தமிழகத்தில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய,இன்னும் இரண்டு நாட்களில் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படும்.தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு இக்கட்டான சூழ்நிலை இருந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல்,ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இது அடுத்த நான்கு நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via