வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கேரள எம்.பியிடம் மனு.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் ஜூன் 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில், இன்று மதியம் எர்ணாகுளத்திலிருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரயிலானது, சுமார் 7.50 மணியளவில் செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலுக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்து வந்த கேரௗ மாநிலம் மாவேலிக்கரை பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷிடம் வேளாங்கன்னி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, இந்த ரயிலானது தென்காசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ரயிலானது கோட்டயம், செங்கனூர், மாவேலிக்கரை, கொல்லம், புனலூர், செங்கோட்டை, கடையநல்லூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், அதிகாலை 5.50 மணிக்கு ரயிலானது வேளாங்கண்ணியை சென்றடையும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த ரயிலில் பயணம் செய்து வந்த எம்.பி.கொடிக்குன்னில் சுரேஷ் கூறும்போது, பாலருவி - நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்வதற்கும், குருவாயூர் - புனலூர் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்வதற்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tags :