அழகான பல் வரிசையும் சிரிப்பும் ..அதுதான் எம்.என். ராஜம் 

by Editor / 24-07-2021 07:18:41pm
அழகான பல் வரிசையும் சிரிப்பும் ..அதுதான் எம்.என். ராஜம் 

 

அழகான பல் வரிசையும் சிரிப்பும் எம்.என்.ராஜத்தின் அடையாளங்கள். அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர்  ராஜம் கதாநாயகியானது 50களில். ஆனாலும் ராஜத்துக்குக் கனவுக்கன்னி என்றோ, புன்னகை அரசி என்றோ பட்டங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

எம்.என்.ராஜம் பெயரைச் சொன்னாலே பளிச்சென்ற சிரிப்பு மட்டுமல்லாமல் பண்பட்ட நடிப்பும் அவரது அழுத்தம் திருத்தமான, தெளிவான, கணீரென்று ஒலிக்கும் தமிழ் உச்சரிப்பும்தான் முதலில் நினைவுக்கு வரும். சங்கம் வளர்த்த மதுரையிலிருந்து நடிப்புலகம் நோக்கி வந்த அசல் தமிழச்சி என்று பெருமையோடு அவரைச் சொல்லிக் கொள்ளலாம்.


ராஜத்துக்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் நடிகைகளின் ஆக்கிரமிப்பில் (ஆனாலும், அவர்கள் அனைவருமே வேற்று மொழி பேசுபவர்களாக இருந்தாலும், தமிழை முறையாகக் கற்றுக்கொண்டு சொந்தக் குரலில் பேசி, பாடி சாதித்தவர்கள் என்ற பெருமைக்கும் மரியாதைக்கும் சொந்தக்காரர்கள் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.) இருந்த தமிழ்த் திரையுலகில் அசல் தமிழச்சியாகவும் ராஜம் இருந்தார். தமிழையும் இவரையும் பிரிக்க முடியாத அளவு நெருங்கிய தொடர்பு ராஜத்துக்கு உண்டு. மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம் (எம்.என்.ராஜம்) என்று தன் பெயருடனேயே பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டிருப்பவர் இவர்.


வறுமையின் பிடியில் சிக்கிய இளமைப் பருவம் இவருடையது. இரண்டு இளைய சகோதரர்களுடன் பிறந்தவர் என்றாலும் பெரும்பாலும் இவரை வளர்த்தவை என்னவோ பாய்ஸ் கம்பெனி நாடகங்களே. மதுரையில் மூத்த நடிகர் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நடத்தி வந்த மதுரை மங்கள கான சபா நாடகக் குழுவில் 7 வயதில் வந்து இணைந்தவர். அந்த இளம் வயதிலேயே நாடகத் துறையுடன் தொடர்பு ஏற்பட்டது. பையன்களால் நிறைந்திருந்த பாய்ஸ் நாடகக் குழுவில் சிறுமி ராஜமும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இயல்பாக பள்ளி செல்லும் வயதில், நாடகக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


நடிப்பு, முறையான பள்ளிக் கல்வி போன்ற எதுவும் இல்லாதபோதும், அவற்றின் மீது தீராத காதலும் ஆர்வமும் அவருக்கு இருந்தது. ஆடல், பாடல் பயிற்சிகளுடன் மொழிப் பாடம், கணிதம் போன்றவை அங்குதான் அவருக்குக் கற்றுத் தரப்பட்டன. பின்னாளில் நாடக உலகிலும் திரையுலகிலும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசன், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், காக்கா ராதாகிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், டி.வி.நாராயணசாமி
போன்ற பல திறமையான கலைஞர்களும் அங்கு சிறுவர்களாக, இளைஞர்களாக ஏற்கனவே பயிற்சி பெற்று நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாளைய பாய்ஸ் நாடகக் கம்பெனிகள் நடிப்பை மட்டும் சொல்லித் தருபவையாக இல்லாமல், வாழ்வியலையும் மனித மாண்பையும் சேர்த்தே கற்றுத் தருபவையாக குருகுல முறையில் இயங்கி வந்தன. அங்கு பெற்ற பயிற்சிகளும் நடிப்பின் மீதான தீராத பற்றுதலும் அவரைத் தொடர்ந்து நாடகங்கள், திரைப்படங்கள் என இயங்க வைத்தது என்பதே உண்மை.


யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையால் தொடர்ந்து தன் நாடகக் கம்பெனியை நடத்த முடியாமல் போனது. பொருளாதார ரீதியான பற்றாக்குறையும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படங்களில் தனக்கென்று தனி பாணி நகைச்சுவையை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரை மங்கள கான சபாவை வாங்கி நடத்த முன் வந்தார். ‘என்.எஸ்.கே நாடக மன்றம்’ என்னும் பெயரில் மேலும் சிறப்பாக இயங்கியது குழு. கலைவாணர் மற்றும் டி.ஏ.மதுரம் தம்பதியரின் அன்பும் ஆதரவும் ராஜத்துக்குக் கிட்டியது. அதன் பலன் இரண்டே ஆண்டுகளில் அவரது திரையுலகப் பிரவேசமும் நிகழ்ந்தது. ஆம் ! 9 வயது சிறுமி ராஜம் குழந்தை நட்சத்திரமாக ‘நல்லதம்பி’ படத்தில் 1949ல் அறிமுகமானார். மதுரத்தின் தங்கையாக நடித்தார்.


அந்தப் அழகான பல்வரிசையும் சிரிப்பும் கொஞ்சமும் மாறாத அடையாளமாக அப்போதிலிருந்தே திரைப்படங்களில் இடம் பெறத் தொடங்கி விட்டது. ‘எட்டு ஏழு ஆறுன்னு இது எவர் சொன்னா அதன் பொருளென்ன?’ என்று கேள்வி - பதில் பாணியிலான ஒரு பாடலையும் அக்காள் மதுரத்துடன் இணைந்து பாடி நடித்திருப்பார். நாடகங்களே முதன்மை என்ற நிலை மஞ்சள் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறைக்குச் செல்லும் வரை ஒரு குறையுமில்லாமல் நாடகக் குழு இயங்கி வந்தது. அதன் பின் நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தியவர்கள் மதுரமும், எஸ்.வி. சஹஸ்ரநாமம் இருவரும்தான். என்.எஸ்.கே இல்லாத நிலையில் பலரும் குழுவை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க டி.கே.சண்முகம் கம்பெனி அவர்களுக்குக் கை கொடுத்தது.


ராஜம் அங்குதான் முதன்முதலில் கதாநாயகியாக நாடகங்களில் அறிமுகமானார். பொதுவாக ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருந்த காலம் அது. ராஜத்துக்கு முன்னதாகவே கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஆர்.ஜானகி, பாலாமணி, கே.பி.ஜானகி, எம்.எஸ்.திரௌபதி போன்ற பல நடிகைகள் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்திருந்தார்கள். திரைத்துறைக்கு வராமல் நாடகத்துறையுடன் மட்டும் தங்கள் கலை வாழ்வைச் சுருக்கிக் கொண்டவர்கள் அவர்களில் பலர். நாடக உலக முன்னோடிகளான அவர்கள் போட்டுக் கொடுத்த ராஜபாட்டையாக அது இல்லாவிடினும் முன்னேறிச் செல்ல தகுந்த பாதையாக ராஜத்துக்கும் வழி வகுத்துக் கொடுத்தது.


அதன் பின் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக்குழு அவருக்கு முகவரியானது. தன் வாழ்நாள் துணையான ஏ.எல்.ராகவனின் அறிமுகம் அங்குதான் அவருக்குக் கிடைத்தது. நாடகங்களில் ஆரம்ப காலங்களில் பெண் வேடமும் பின் அனைத்து வேடங்களும் ஏற்று நடித்துக் கொண்டிருந்த  வி.சி.கணேசனுக்கு (பின்னாளில் சிவாஜி கணேசன்) பின்னணி பாடும் கலைஞராக ஏ.எல்.ராகவன் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். நாடகங்களில் நடிப்பதன் ஊடாகத் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்தார் ராஜம். மங்கையர்க்கரசி, என் தங்கை, மாப்பிள்ளை, பெண் மனம், மனிதனும் மிருகமும் போன்ற படங்கள் எல்லாம் அவ்வாறு அமைந்தவையே..

சிறிய வேடங்களிலிருந்து பெரும் பாய்ச்சலாக சாதித்துக் காண்பிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்புதான் ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம். படம் வெளி வருவதற்குள் பல சோதனைகளை அவர் எதிர் கொள்ள நேர்ந்தது. இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் நடிக வேள் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடிக்க, ஒரு முக்கியமான பாத்திரத்தில் அறிமுகமானார் ராஜம். குருவி தலையில் பனங்காய் என்பதைப் போல ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு மிக மிக அதிகமான சுமை அந்த வேடம். தாசிப் பெண்ணாக ஆள் மயக்கும் கைகாரியான அந்த வேடத்தை ஏற்க பல நடிகைகளும் தயங்கிய நிலையில், துணிச்சலாக முன்வந்து அந்த வேடமேற்றார் ராஜம்.

இயக்குநர்களின் ஏகோபித்த ஆதரவும் அவருக்கு இருந்தது. எம்.ஆர்.ராதா 1937ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தார். 1942க்குப் பிறகு அவர் பட உலகை விட்டு விலகியே இருந்தார். நடிகையர் பலரும் ராதாவுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு அவரது முரட்டு குணம் மற்றும் அவரின் அரசியல் செயல்பாடுகளும் அப்போது காரணங்களாகச் சொல்லப்பட்டன. இந்த நிலையில்தான் ராஜம் அந்த வேடத்தை ஏற்க முன் வந்தார். படம் பாதியளவு எடுக்கப்பட்டு விட்ட நிலையில், எம்.ஆர்.ராதாவுக்கு ராஜத்தின் நடிப்பில் திருப்தி இல்லாததால் அவரை வெளியேற்றும்படி இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவிடம் கோரிக்கை வைத்தார்.


ஆனால், அவர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. அத்துடன் ராஜத்துக்கு ஆதரவாகவும் இருந்தனர். ராஜத்தை வெளியேற்றுவது என முடிவெடுத்தால் தாங்களும் இந்தப் படத்தைக் கைவிட்டு விடுவதாகவும் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் ராதா மேற்கொண்டு பிரச்சனை ஏதும் செய்யாமல் தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏற்கனவே 11 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அவருக்கும் இது திரையுலகில் மறு பிரவேசம். அவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு படத்தில் தொடர சம்மதித்தார். ‘இரத்தக் கண்ணீர்’ ஓராண்டு கால தயாரிப்பு, பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் 1954 நவம்பர் 6 அன்று வெளியாகி, பெரும் வெற்றியைப் பெற்றது.


திருவாரூர் தங்கராசு எழுத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை சாட்டையடியாக உரத்துப் பேசிய படமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது ரத்தக்கண்ணீர். வில்லி வேடம் ஏற்றிருந்தாலும் தன் அபார நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார் எம்.என்.ராஜம். ஒருவேளை ரத்தக்கண்ணீர் படத்திலிருந்து பாதியில் அவர் வெளியேற்றப்பட்டிருந்தால், மீண்டும் அவர் விட்ட இடத்தைப் பிடிக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்திருக்கும். நடிகர்களுக்கே அந்த நிலை சிரமம் என்னும்போது, வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகைக்கோ பன்மடங்கு துயரம் அது. இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் ஆபத்பாந்தவர்களாக இருந்து ராஜம் திரையுலகில் நீடித்து நிலைக்க பேருதவி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.


1949ல் தொடங்கிய அவரது திரைப் பயணம் 70 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இவ்வளவு நீண்ட காலம் வேறு எவரும் நீடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். இதற்காகவே அவருக்குத் திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்த வேண்டும். பாய்ஸ் கம்பெனி நாடக நடிகைகள் அனைவரும் மறைந்து விட்ட நிலையில் தற்போதும் அதன் சாட்சியாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை எம்.என்.ராஜம் ஒருவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரும் தன் ஆரம்ப கால நாடக வாழ்க்கையே தனக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது என்பதில் மாறாத நம்பிக்கை கொண்டவர்.
வில்லி வேடத்தில்பொருத்தமான நடிப்பு.


பாட்டொன்று கேட்டேன்
காளை வயசு கட்டான சைசு
ஆளை ஆளை பார்க்கிறார்
சிங்காரப் புன்னகை
மானம் ஒன்றே பெரிதன
இவர் நடித்த சில பாடல்கள்..... 


அதேபோல, நடிகர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டது 1952 ஆம் ஆண்டில். நடிகர் சங்கத்தின் மூத்த, முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கே உரித்தானது. நடிகர் சங்கத்தில் எம்.என்.ராஜத்தின் உறுப்பினர் எண் : 19. நடிகை டி.ஆர்.ராஜகுமாரியைப் போலவே வில்லி, கதாநாயகி, இதர குணச்சித்திர வேடங்கள் என அனைத்தையும் ஏற்று தொடர்ந்து செய்தவர் ராஜம். ஒரு நடிகைக்கு எந்த வேடம் என்றாலும் ஏற்று நடிக்க வேண்டிய கடமை உண்டு என்பதில் உறுதியானவர் அவர்.

அதனாலேயே இவ்வளவு நீண்ட காலம் திரையுலகில் அவரால் நீடித்து நிலைக்க முடிந்தது. 1950 ல் தொடங்கிய அவரது திரைப்பயணம் 2007 வரை தொடர்ந்தது..குட்டி (2001), பம்மல் கே சம்பந்தம்(2002), வின்னர்2003), அன்பே வா(2005),திருப்பாச்சி(2005), இம்சை அரசன் 23ம் புலிகேசி(2006), மருதமலை(2007).

 

Tags :

Share via