தடையில்லாச் சான்று வழங்க ரூ.3லட்சம் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது

by Editor / 03-07-2022 02:18:03pm
தடையில்லாச் சான்று வழங்க ரூ.3லட்சம் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நில விற்பனைக்கு தடையில்லாச் சான்று வழங்க ரூ. 3 லட்சம் லஞ்சமாக வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விளாத்திகுளம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த  11 ஏக்கர் நிலத்திற்கு தமிழக அரசு கடந்த 2004-ம் ஆண்டில் இலவசப் பட்டாவாக வழங்கியுள்ளது. அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை 14 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தற்போது அந்த நிலத்தை விற்பதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் தடையில்லாச் சான்று கேட்டு முனியசாமி விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனு குளத்தூர் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனிடம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தடையில்லாச் சான்று வழங்க ஏக்கருக்கு ரூ. 30,000 வீதம் 11 ஏக்கருக்கு ரூ.3,30,000 கேட்டதாகத் தெரிகிறது. இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் முனியசாமி புகார் அளித்துள்ளார். பின்னர் அவர்கள் அறிவுரையின்படி ரசாயனம் தடவப்பட்ட பணத்துடன் சென்றுள்ளார். ஆனால் தான் வெளியூரில் இருப்பதாக கூறிய செந்தில்முருகன், லஞ்சப் பணத்தை  கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி பணம் கொடுக்கப்பட்ட போது உமேஷ்குமாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
 

 

Tags :

Share via