பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர்,  தாளாளர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்ப்பு

by Editor / 31-05-2021 07:18:41pm
பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர்,  தாளாளர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்ப்பு


மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு, பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர்.
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், கடந்த 24 ஆம் தேதி அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக அசோக் நகர் காவல் துறையினர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் 2 நாட்களாக சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி மாணவிகள், பெற்றோர்களின் புகார்களை அலட்சியப்படுத்தியது ஏன்? புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உள்ளிட்ட கேள்விகளை காவல் துறையினர் கேட்டு வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பாலியல் தொல்லை வழக்குத்தொடர்பாக சென்னை மாவட்ட (தெற்கு மண்டலம்) குழந்தைகள் நலக்குழு அலுவலர் சூர்யகலா பள்ளிக்கு நேரடியாக விசாரணை நடத்தச் சென்றார். ஆனால், பள்ளி நிர்வாகம் அவரை உள்ளேயே அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரை காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 26-ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழு சம்மன் அனுப்பியிருந்தது.
அழைப்பாணையை மதிக்காத பள்ளி நிர்வாகிகள்சென்னை கெல்லீசில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ராஜ்குமார் முன் 2 பேரும் ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த சம்மன்படி அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆஜராகவில்லை. பள்ளி தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை, விளக்கமும் அளிக்கவில்லை என்று மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலில் எடுக்க உள்ளனர்.இதற்கிடையில் மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையமும் அப்பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோருக்கு சம்மன் கொடுத்துள்ளது. வருகிற ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via