இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது வாட்ஸ் அப்!

by Editor / 01-06-2021 12:13:30pm
இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது வாட்ஸ் அப்!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக பரேஷ் பி.லால் என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் கடந்த வாரத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் இருக்கும் சமூக வலைதளம் தங்களுக்கென குறைதீர்ப்பு அதிகாரி, தலைமை அதிகாரி, தலைமை ஒழுங்கு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும், அவர்கள் இந்தியாவில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ அப் நிறுவனம் இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக பரேஷ் பி.லால் என்பவரை நியமித்துள்ளது. குறைகளை அனுப்புவோர் குறைதீர்ப்பு அதிகாரி பஞ்சாரா ஹில்ஸ், ஹைதராபாத் என்ற முகவரியையும் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனமும் தன்னுடைய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய விதிகளின்படி இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியின் பெயரைப் பதிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது கூகுள் இணையதளத்தில் தொடர்பு அதிகாரி என்ற பெயரில் ஜோ கிரீயர், மவுன்டெயின் வியூ அமெரிக்கா என்ற முகவரி மட்டுமே இருக்கிறது. விரைவில் இந்திய குறைதீர்ப்பு அதிகாரியின் பெயர் இடம் பெறும் எனத் தெரிகிறது.

தகவல் தொழில்நுட்ப புதிய விதிகளின்படி, சமூக வலைதளங்கள் அனைத்தும் தன்னுடைய இணையதளம், செயலி ஆகியவற்றில் குறைதீர்ப்பு அதிகாரியின் பெயர், தொடர்பு முகவரி, ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவிட்டு, புகார்தாரர்கள் எளிதாக அணுகுமாறு இருக்க வேண்டும்.

குறைதீர்ப்பு அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும்.

சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதேனும் குறிப்பிடப்பட்டால் அந்தக் கருத்துகள், படங்களை சமூக வலைதளம் அடுத்த 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும், ஆபாசப் படங்களை 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். சமூக வலைதளத்தைத் தவறாக யாரும் பயன்படுத்தக் கூடாது, தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே குறைதீர்ப்பு மையத்தை அரசு உருவாக்கியுள்ளது.

இந்த சமூக வலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் பெறப்பட்ட புகார்கள், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, நீக்கப்பட்ட கருத்துகள், படங்கள், கண்காணிப்புகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் எனப் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via