ஊர்க்காவல்படை வீரர் புகார் அளிக்க வந்த மாணவி நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் வயது 30 திருமணமானவர். இவருக்கு திருமணமாகி சரிதா என்ற மனைவி உள்ளார்.
செந்துறையில் உள்ள ஊர்க்காவல் படையில் காவலராக பணிபுரிந்து வந்த அர்ஜூன், கடந்த ஆண்டு சன்னாசிநல்லூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் நைசாக பேசி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்துள்ளார், அந்த கல்லூரிக்கு அருகில் அர்ஜூன் உறவினர் ஒருவர் பெட்டிகடை வைத்திருந்தார். அந்த கடைக்கு அர்ஜூன் செல்வதும், அந்த மாணவியும் கடைக்கு வருவதுமாக மேலும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நெருக்கம் அதிகமானதையடுத்து ஒரு நாள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி அர்ஜூன் அந்த மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார். அதை செல்போனில் படம் எடுத்து அடிக்கடி மாணவியை தனிமையில் சந்திக்க வற்புறுத்தியும் இருக்கிறார்.
மேலும் தனது முதல் திருமணத்தை மறைத்து, அதே கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை கலைக்குமாறு அர்ஜூன் வற்புறுத்திய நிலையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களை கேள்விப்பட்ட அர்ஜூனனின் முதல் மனைவி சரிதா அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதல் மனைவி அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்ததினால் ஊர்க்காவல் படை காவலர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் ஊர்க்காவல் படையில் இருந்து நீக்கப்பட்டார்.
அதேபோல் முதல் மனைவி இருப்பதை மறைத்து திருமணம் செய்ததினால் அந்த மாணவியும் அர்ஜூனுடன் வாழாமல் விலகிச் சென்றார். ஆனாலும் மாணவியுடன் ஒன்றாக இருப்பதுபோல், செல்போனில் எடுத்த போட்டோ மற்றும் லேப்டாப், ஏ.டி.எம். கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை வைத்துக் கொண்டு என்னுடன் வாழ வேண்டும் இல்லையேல் கொலை செய்து விடுவேன், என அர்ஜூன் மிரட்டி வந்துள்ளார்.
இதுபற்றி புகார் கொடுப்பதற்காக வந்த மாணவி, அரியலூர் மாவட்ட நீதிபதி முன்பு திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கல்லூரி மாணவியை தடுத்து நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நீதிபதியிடம், அர்ஜூன், அவரது முதல் மனைவி சரிதா, தந்தை பழனிவேல், தம்பி மணிமாறன் ஆகியோர் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாவட்ட நீதிபதி மகாலட்சுமி அந்த மாணவியிடம் நன்றாக படி, வேலைக்கு செல்ல முயற்சி எடுக்க வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும், தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
மேலும் மாணவியின் வாக்குமூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவிக்கு அநீதி இழைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Tags :