இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் ஏர் இந்தியா தகவல்

by Admin / 26-02-2022 11:43:41am
 இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் ஏர் இந்தியா தகவல்

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் காரணமாக  அங்குள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு இன்று இரண்டு விமானங்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேறும் பாதைகள் குறித்த விபரங்களை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 

சாலை வழியே பயணிக்கும் போது இந்தியக் கொடியை வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய பயணிகள் தங்கள் கடவுச்சீட்டுகள், பணம், பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை எல்லை சோதனைச் சாவடிகளுக்கு செல்லும் போது கொண்டு செல்லுமாறும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கெய்வ் மற்றும் ருமேனிய எல்லை சோதனைச் சாவடிக்கு இடையே உள்ள தூரம் 600 கிலோ மீட்டர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 

சாலை வழியாகச் செல்ல எட்டரை முதல் 11 மணி நேரம் வரை ஆகும்.  அங்கிருந்து தலைநகர் புக்கரெஸ்ட்,  சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் ருமேனியா எல்லை வழியாக உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ருமேனியா எல்லை வழியாக உக்ரைனை விட்டு வெளியேறும் இந்திய மாணவர்கள் 
சாலை வழியாக உக்ரைன்-ருமேனியா எல்லையை அடையும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை, மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவை சேர்ந்தவர்கள் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதையடுத்து அங்கு தயாராக இருக்கும் ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்புகின்றனர். 470க்கும் மேற்பட்ட மாணவர்கள் ருமேனியா எல்லை வழியாக மீட்கப்படுவார்கள் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன.    
 

 

Tags :

Share via