நெல்லை மாவட்டத்தில் மருத்துவகுணம் வாய்ந்த முருங்கை விலை சரிவு.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை குறைவாக இருந்த காய்கறி விலைகள், கடந்த வாரம் உயர்ந்த நிலையில், இன்று பெரும்பாலான காய்கறிகளின் விலை சரிவையும், சிலவற்றின் விலை உயர்வையும் சந்தித்துள்ளன. குறிப்பாக, முருங்கைக்காய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற வெளி நகரங்களிலிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாகவே தக்காளி விலை குறைவாகவே இருந்து வருகிறது. இன்று 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.20 என்ற அளவிலும், 5 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தரிக்காய் விலை உயர்ந்த நிலையிலேயே இருந்தாலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.80 ஆக இருந்த வெள்ளை கத்தரிக்காய், இன்று ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் அவரைக்காய் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.90 ஆக அதிகரித்துள்ளது. மிளகாய் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையான மிளகாய், இன்று ரூ.35 முதல் ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. மானூர், எட்டான்குளம் பகுதிகளில் மிளகாய் விளைச்சல் முடிந்துவிட்டதால், வெளி நகரங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் கிலோ ரூ.100-ஐ எட்டிய முருங்கைக்காய் விலை, இன்று ரூ.40 ஆக குறைந்துள்ளது. திசையன்விளை சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் முருங்கைக்காய்கள் ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. அதேநேரம், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து வரும் முருங்கைக்காய்கள் தரமாக இருப்பதால், அவை ரூ.60-க்கு விற்பனையாகின்றன.
Tags : நெல்லை.