வரலாறு காணாத வெள்ள பாதிப்பால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்- 1000 பேர் பலி.

by Editor / 29-08-2022 10:09:03am
வரலாறு காணாத வெள்ள பாதிப்பால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்- 1000 பேர் பலி.

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பருவமழை வெள்ள பாதிப்பால் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்நாட்டின் 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவலின் படி, இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 119 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிந்த் மாகாணத்தில் 347 பேரும், அடுத்து பலுச்சிஸ்தானில் 238 பேரும் கைபர் மாகாணத்தில் 226 பேரும் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

 

Tags :

Share via