அண்ணாமலை போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

by Editor / 09-08-2021 08:13:22pm
அண்ணாமலை போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு


திருச்சி  சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது 2019 இல் வழங்கப்பட்டுள்ள 42 இறவை பாசன திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். காவிரியில் புதிய நீர் பாசன திட்டங்களை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "இறவை பாசனத் திட்டம் குறித்து தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. தலைமைச் செயலாளரும் இது குறித்த ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளார்.

எனவே, அரசு விரைவில் இந்த42 இறவை பாசனத் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுப்போம். கடந்த அதிமுக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தினால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாசன வசதி பெற முடியாமல் பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்படும்.

எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தால் மேகதாது அணை கட்டப்படாது என்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் பாஜகவினர் தஞ்சையில் போராட்டம் நடத்த தொடங்கிய பொழுது, கர்நாடகாவில் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. எனவே, அண்ணாமலை போராட்டத்தால் மேகதாது அணை தடைபடாது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும். தமிழர்கள் அகதியாக விரட்டு அடிக்கப்படுவார்கள். இதற்கு முழு பொறுப்பு பாஜக தான்" என தெரிவித்தார்.

 

Tags :

Share via