திமுக அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக உள்ளது-எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

by Editor / 06-09-2022 11:13:55pm
திமுக அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக உள்ளது-எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு


திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேளதாளத்தோடு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஏதோ ஒரு சூழலில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுக சார்பாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக உள்ளது. மக்கள் எக்கேடுகெட்டால் என்ன? தன் குடும்பத்திற்கு என்ன நன்மை என்பதையே திமுக பார்க்கிறது. பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளது.


இந்தியாவிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம் என்பதை அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கினோம். நூல் விலை ஏற்றம் காரணமாக விசைத்தறிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர் இருந்த போதும், அமைச்சர்களை நம்பாமல், அரசு அதிகாரிகளை
நம்பாமல் ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு போட்டு அறிக்கை வந்த பிறகே திட்டத்தை
நிறைவேற்றுகிறார்கள். மாதம்தோறும் பெண்களுக்கு 1000 ருபாய், கல்விக்கடன் தள்ளுபடி , முதியோர் உதவித்தொகை, கேஸ் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு என எதையும் திமுக அரசு செய்யவில்லை.

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் ரம்மி நிறுவனமும் திமுக விற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கிறது. சூதாட்டத்துற்கு துணைபோகும் ஆட்சியாக திமுக உள்ளது என்று பேசினார்.
 

 

Tags :

Share via