எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழா

by Editor / 11-09-2022 11:43:20am
 எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழா

 சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் (காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து இத்திருவிழாவிற்கு காப்பு கட்டினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி பல மணிநேரம் நடந்து வருகிறது.

காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல்மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து, அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீச்சியடிக்கும் ரத்தத்தை சாமியாடுபவர்களும், மற்ற சிலரும் அப்படியே குடித்தனர். காளிக்கு எருமையையும், பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். எருமை மாடுகளும்,ஆடுகளும் வெட்டப்பட்டன. இவ்விழா 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகின்றனர்.

அந்த கறியை குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் இருந்தாலும் அவர்களுக்கு கொடுத்தனுப்புகின்றனர். இவ்விழா அனைவரும் முடிவு செய்து ஆண்டுதோறும்  அல்லது சில ஆண்டுகள் இடைவெளிவிட்டோ நடத்தப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டு மற்றும் கடந்த 2017, 2018ம் ஆண்டு இவ்விழா நடத்தப்பட்டது. மீண்டும் தற்போது நடத்தப்பட்டுள்ளது.காளி அசுரனை (எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும், அதனால் அதை சிந்தவிடாமல் குடித்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த விழாவில் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo