பர்க்கர் சாப்பிடும் போது சிக்கிய கையுறை சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக் கடையான கே.எப்.சி. சிக்கன் கடைக்கு சென்றுள்ளனர்.
அங்கே பர்கர் வாங்கியுள்ளார் டேவிட். பர்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு பிளாஸ்டிக் பொருள் தென்பட்டுள்ளது. உடனடியாக பர்கரை பிரித்து பார்த்த போது அதில் கையுறை இருந்தது தெரியவந்தது. இதை கண்டதும் டேவிட் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பர்கரில் கையுறை இருந்ததை உடனடியாக உணவகத்தின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு டேவிட் வேண்டாம் என தெரிவித்ததோடு, கையுறை இருந்ததை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த வீடியோவை அனுப்பி உள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நேற்று ஆரணி பகுதியில் பீட்ரூட்டில் எலி தலை இருந்தது தொடர்பாக செய்தி வெளியானது. தற்போது பர்கரில் கையுறை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :