புரட்டாசி முதல் சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

by Editor / 24-09-2022 11:27:16pm
புரட்டாசி முதல் சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியை சுற்றி 9 நவதிருப்பதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், பெருங்குளம் மாய கூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகிய நவ திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்தியல், தீபாராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்வேறு வாகனங்களில் வந்த  பக்தர்கள்குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. பொது தரிசனம் மற்றும் பத்து ரூபாய் சிறப்புக் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் இன்று சிறப்பு  பூஜை நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கும், எதிரே அவுஷதகிரி மலையில் உள்ள ஹயக்கிரீவரை வழிபடுவதற்காகவும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி இன்று தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் திருவந்திபுரத்தில் குவிந்துள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் வெளிபிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் ஆலயங்களில்
சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே
புரட்டாசி முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குடும்பத்துடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமைகளில் பெருமாளை வந்து தரிசனம் செய்து விட்டு பின்னர் தங்களது வீடுகளில் சென்று விரதத்தை பூர்த்தி செய்வது வழக்கமான நிகழ்வு – அந்த வகையில் காலை முதலே திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தமர் திருக்கோவில்,பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் குணசீலம் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஆலயங்களிலும் பொதுமக்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் காலை முதல் பெருமாளை தரிசிக்க மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெருமாளை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று தரிசித்ததில் மகிழ்ச்சி என்று பக்தர்கள் தெரிவித்தனர். 


 

 


 

 


 

 

Tags :

Share via