72 கொக்கைன் பாக்கெட்டுகளுடன் நைஜீரிய நாட்டுப்பெண் கைது.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தாம்பரம் மாநகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிக்கரணை மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் கானாத்தூர் சுங்கச்சாவடி அருகே கண்காணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய வெளிநாட்டுப்பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தைக்கொடுக்கும்போது மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அப்பெண் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆன்யனி மோனிகா(30) என்பதும், கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி பாரதி நகரில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு கிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரது பேக்கை சோதனை செய்தபோது ஒரு கிராம் வீதம் 72 சிறு சிறு கொக்கைன் பாக்கெட்டுகள் இருந்தன. கொக்கைன் விற்ற பணமான, இரண்டு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நைஜீரிய நாட்டுப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags :