தம்பியை கொன்ற அண்ணன் கைது உறவினர்கள் சாலை மறியல்
கூவத்துார் அருகே, முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 63. இவர், தன் குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக இடத்தில் வசிக்கிறார்.அந்த இடத்தை பிரிப்பதில், இவருக்கும், இவரது தம்பி பத்மநாபன், 55, மற்றும் மூன்று சகோதரிகளிடையே, பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் ராமகிருஷ்ணன், குடும்பத்துடன் திருச்சிக்கு சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பூர்வீக இடத்திலிருந்த நான்கு தென்னை மரம், இரு புளியமரம் வெட்டப்பட்டிருந்தது.
மரங்களை வெட்டியது பத்மநாபன் குடும்பத்தினர் என்பதை அறிந்த ராமகிருஷ்ணன், அவர்கள் வீட்டிற்கு சென்று, வாக்குவாதம் செய்துள்ளார். இரு குடும்பத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பத்மநாபனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கூவத்துார் போலீசார் வழக்கு பதிந்து, ராமகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ், 28, ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கொலைக்கு துாண்டுதலாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என, முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில், பத்மநாபன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்துார் போலீசார், மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
Tags :


















.jpg)
