பெட்ரோல் குண்டு வீசிய முக்கிய ரவுடி நீதிமன்றத்தில் சரண்

by Staff / 16-10-2022 05:19:29pm
 பெட்ரோல் குண்டு வீசிய முக்கிய ரவுடி நீதிமன்றத்தில் சரண்

சென்னை, ஆலந்துார் ஆபிரகாம் தெருவில், கடந்த 9ம் தேதி இரவு, 20 பேர் உடைய கும்பல், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து, அங்கிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது.பின், ஆபிரகாம் தெருவிலுள்ள சித்தர் மடத்தில், அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும், அங்கு நின்றிருந்த நவீன், 28, தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் சபீக், 22, அபுபக்கர், 19, ஆகியோரை வெட்டியது.தகவலறிந்து, ரோந்து போலீசார் அங்கு சென்ற போது, அவர்கள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி, கும்பல் தப்பிச் சென்றது.இது குறித்து, மவுன்ட் போலீசார் வழக்குப்பதிந்து, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் பதுங்கி இருந்த ரவுடி ராபின்சன் கோஷ்டியைச் சேர்ந்த மணி, நவீன் குமார் உள்ளிட்ட, 19 பேரை கைது செய்து விசாரித்தனர்.ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவர் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும், ராபின்சன் என்பவர் தலைமையில், மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வந்துள்ளன.

கடந்த ஆண்டு, நாகூர் மீரானை, ராபின்சன் கோஷ்டி கொலை செய்தது. இதையடுத்து, ராபின்சனை கொலை செய்ய, நாகூர் மீரான் தரப்பினர் தயாராகினர்.இந்நிலையில், கடந்த 9ம் தேதி, ராபின்சன் தங்கை ஷெரின், தன் நண்பர் அணில், 22, என்பவருடன், கிண்டி மடுவங்கரை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது வழிமறித்த இருவர், அணிலை கடத்தி தாக்கியுள்ளனர். ஷெரின் தன் அண்ணன் ராபின்சனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.இதையடுத்து, ராபின்சன் உள்ளிட்ட சிலர், கும்பலாக, பயங்கர ஆயுதங்களுடன் நாகூர் மீரான் வசிக்கும் பகுதியான ஆலந்துார், ஆபிரகாம் தெருவில், பெட்ரோல் குண்டுகளை வீசி ரகளை செய்தது தெரிந்தது.இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராபின்சன், 27, செய்யூர் நீதிமன்றத்தில், குற்றவியல் நீதிபதி முன் சரணடைந்தார். பின், நீதிமன்ற காவலில், செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via