நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும்" - எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது, "உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணைச் செயலாளராகவும் நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்து சுமார் இரண்டு மாத காலமாகிறது. பின்னர் நினைவூட்டல் கடிதம் இரண்டு முறை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நேற்று வரை சரியான முடிவு எடுக்கப்படவில்லை. நேற்று எங்களது கோரிக்கையை ஏற்காமல், ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்தவரே தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவரை அந்த இருக்கையில் அமர வைத்துள்ளனர். நியாயமாக நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர், அரசியல் ரீதியாக செயல்படுவதை பார்க்கிறோம். தி.மு.க. தலைவர் ஆலோசனைபடி சட்டசபை தலைவர் செயல்படுகிறார். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் கொல்லைப்புறமாக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார். ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும்" என்றார்.
Tags :