அதிமுக ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப்பதிவு செய்க சீமான்

by Staff / 19-10-2022 02:13:20pm
அதிமுக ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப்பதிவு செய்க  சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிற அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது ஆணையத்தின் அறிக்கை. 14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.

துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்

 

Tags :

Share via