ஆவணி மாதப் பண்டிகை கொண்டாட்டம்
ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. தமிழ் வருடத்தில் ஐந்தாவதாக வரும் மாதமானது தமிழ் சந்திர மாதத்தில் ஆவணி என்று அழைக்கப்படுகிறது.
ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. ஆவணியில் விநாயக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் ஓணம் கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற வழிபாடுகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இளையான்குடி மாறநாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் ஆகியோர்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி:
முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்கள், வீடுகளில் உள்ள விநாயகருக்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை படைக்கப்படுகின்றன. அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி உள்ளிட்டவை விநாயகருக்கு அணிவிக்கப்படுகின்றன.
விநாயகர் பொம்மைகள் செய்து விநாயக சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பொது இடத்தில் வைத்திருந்து வழிபாடு மேற்கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால் இவ்விழாவினை சமுதாயத் திருவிழா என்றே கூறலாம்.
விநாயக சதுர்த்தி அன்று விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயக சதுர்த்தியில் இருந்து விரதத்தைத் தொடங்கி பின் வரும் மாதங்களிலும் சதுர்த்தி அன்று விரதத்தைத் தொடர்கின்றனர்.
இவ்விரதத்தை மேற்கொள்வதால் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.
மகாசங்கடஹர சதுர்த்தி:
ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹரசதுர்த்தி, மகாசங்கடகஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாட்டினை மேற்கொள்வோர் முதலில் மகாசங்கடஹர சதுர்த்தி நாளிலிருந்து ஆரம்பிக்கின்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின்போது பகல் முழுவதும் உண்ணாமல் மாலை வேளையில் விநாயகரை வழிபாடு செய்து சந்திர தரிசனம் செய்து உணவருந்தி விரத முறையானது பூர்த்தி செய்யப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின்போது விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சங்கடநாசன கணபதி என்ற வடிவம் வணங்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். சௌபாக்கிய வாழ்வு கிட்டும். வளர்பிறை சதுர்த்தி (நான்காம் பிறை) சந்திரனைப் பார்ப்பதால் ஏற்படும் தொல்லையானது தேய்பிறை சங்கடஹரசதுர்த்தி வழிபாட்டினை மேற்கொண்டால் சரியாகும்.
கிருஷ்ண ஜெயந்தி:
குழந்தைப் பருவ இறைவனாக வழிபடப்படுவதில் முதலிடம் கிருஷ்ணனனுக்குத்தான். இந்த கிருஷ்ணனின் அவதார தினம் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் நிகழ்ந்தது.
இதனால் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியின்போது கிருஷ்ணனின் பால்ய பருவ குறும்புதனமான விளையாட்டுகள் மற்றும் சாகசங்கள் நினைவு கூறப்படுகின்றன.
கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய் இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், சீடை, தட்டை, தேன்குழல், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவை வழிபாட்டின்போது படைக்கப்படுகின்றன.
சிறு குழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் விரதமுறை பின்பற்றப்படுகிறது. இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகளின் அறிவுத்திறமை மேம்படும். நற்சிந்தனைகள் வளரும்.
ஓணம்:
ஓணம் பண்டிகையானது கேரளா, தென்தமிழகம் மற்றும் மலையாள மக்கள் உள்ள இடங்களில் ஆவணி பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
அத்தப்பூ கோலமும், ஓணவிருந்தும் இப்பண்டிகைக்கான முக்கிய அடையாளங்கள் ஆகும். ஆவணி மாத அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இது கேரளத்து அறுவடைத்திருநாள், கேரளத்து தீபாவளி, கேரளத்து புத்தாண்டு கொண்டாட்டம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
இத்திருவிழா பற்றி மதுரைக்காஞ்சியிலும், தேவாரத்திலும் கூறப்பட்டுள்ளது. இப்பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது மகாபலிச்சக்கரவர்த்தியை வரவேற்க மக்கள் பலவண்ண பூக்களால் அத்தப்பூ கோலம் போடுகின்றனர்.
இப்பண்டிகையின்போது கசப்பு சுவையினைத் தவிர ஏனைய சுவைகளில் 64 வகையான உணவுப் பொருட்கள் தயார் செய்து ஓண விருந்தினை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மக்கள் உண்டு மகிழ்கின்றனர்.
கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகுப்போட்டிகள், மாறுவேடப்போட்டிகள், யானை அணிவகுப்புகள் ஆகியவை இவ்விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்படுகின்றன.
ஆவணி மூலம்:
ஆவணி மூலத்திருவிழாவானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
சொக்கர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களின் நினைவாக 10 திருவிளையாடல்கள் இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது.
ஆவணி மூலத்திருவிழாவின்போது சுந்தரேசருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்கள் சுந்தரேஸ்வரர் மதுரையை ஆட்சி செய்வார்.
வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மாணிக்கவாசகரின் பக்தியை உலகு உணரும் பொருட்டு நரியை பரியாக்கி மன்னனிடம் அளித்தும் ஆவணி மூலத்தன்றுதான் என்று கருதப்படுகிறது.
ஆவணி மூலத்தன்று காலையில் சூரியன் உதயமாகும்போதே வெப்பம் அதிகமாக இருந்தால் அவ்வருடம் முழுவதும் வெயில் வாட்டும் என்றும், மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோசணம் அமையும் என்று கருதப்படுகிறது. எனவே நல்ல சீதோணம் அமைய வழிபாடுகள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆவணி அவிட்டம்:
ஆவணி அவிட்டம் ஆவணி அல்லது ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் உபநயனம் பெற்றவர்கள் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள். வேதங்களையும் படிக்கத் தொடங்குகின்றனர். வேதங்கள் படிக்க ஆவணி அவிட்டம் நல்லநாளாகக் கருதப்படுகிறது.
வரலட்சுமி விரதம்:
வரலட்சுமி விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி மாதத்திலோ ஆவணி மாதத்திலோ கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையானது பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரத வழிபாட்டின் முடிவில் பெண்கள் தங்கள் கைகளில் வழிபாட்டில் இடம்பெற்ற மஞ்சள் கயிற்றினை கட்டிக்கொள்கின்றனர். இவ்விரத வழிபாட்டின்போது இனிப்புக்கள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயாசம், உளுந்தவடை, பலவித பூக்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.
திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப நன்மை, குழந்தைகளின் நலம், ஆரோக்கியம், கல்வி, கணவரின் ஆயுள், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் மற்றும் வளமான குடும்ப வாழ்வு வேண்டியும் இவ்விரதத்தினை கடைப்பிடிக்கின்றனர்.
ஆவணி ஞாயிற்றுகிழமை வழிபாடு:
ஆவணி மாதத்திற்கு அதிபதியாக சூரியன் கருதப்படுகிறார். இதனால் ஆவணி மாத ஞாயிற்று வழிபாடு ஆன்ம பலத்தை அதிகரிக்கும். அக்காலத்தில் ஆடியில் விதைத்த பயிர்கள் ஆவணியில் வளரத் துவங்கும்.
அந்நேரத்தில் விவசாய வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க ஆவணி ஞாயிற்று கிழமை அன்று பெண்கள் விரதம் இருக்கும்முறை உருவானதாகக் கருதப்படுகிறது.
திருமணமான பெண்கள் நல்ல கணவன் வேண்டியும், ஆண்கள் வேலை மற்றும் வாழ்வின் தடைகளை தகர்தெறிய வேண்டியும் ஆவணி ஞாயிற்று கிழமை விரத வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
கண் நோய் உள்ளவர்கள் ஆவணி ஞாயிற்று கிழமை வழிபாட்டினை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம். பாம்புகளை மூலவர்களாகக் கொண்ட வழிபாட்டிடங்களில் சிறப்பு வழிபாடு ஆவணி ஞாயிற்று கிழமைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
புத்ரதா ஏகாதசி:
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இது நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இன்றைய தினம் விரதம் சிறந்த பலனைக் கொடுக்கும்.
காமிகா ஏகாதசி:
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீக்கும்.
ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.
ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத விரதங்களை மேற்கொண்டு விழாக்களைக் கொண்டாடி வாழ்வின் மேன்மையை அடைவோம்.
Tags :