மேகதாதுவில் அணை- எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

by Editor / 19-06-2021 07:00:09pm
மேகதாதுவில் அணை- எடப்பாடி பழனிசாமி கண்டனம் 



மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளமைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
.நான் முதல்வராக இருந்தபோது , பிரதமரை நேரில் சந்தித்தபோது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.
தொடர்ந்து, கர்நாடக அரசு 20.6.2019 அன்று சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகியுள்ளதை அறிந்து, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.
இதுசம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழகத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்குக்கு, எள்முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via