2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய முயற்சி

by Editor / 01-12-2022 08:29:32am
2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய முயற்சி

2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு வரும் ஆண்டு, பணத்தை ரொக்கமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசி பருப்பு 500 கிராம், ஆவின் நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லி தூள் 100 கிராம் ஆகியவை வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டில், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கான பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணத்தை நேரடியாக பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு, பரிசுத் தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வங்கியில் கணக்கு இல்லாதவர்கள், புதிதாக கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் மாவட்ட மத்திய வங்கிகளில், வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இனி 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, வங்கி தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

Tags :

Share via