14பேரை சுட்டுக் கொன்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை சீமான்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது எவ்விதக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாதென திமுக அரசு கைவிரித்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல்து றையினரால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்து, சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்தும் அதனைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தூத்துக்குடியில் மண்ணின் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசப்பயங்கரவாதத்தை, 14 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமான கொடுஞ்செயலைக் கொலைக்குற்றமெனக் கருதி, அதனைச் செய்த காவல்துறையினர் மீதும், காரணமான அதிகார வர்க்கத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்காது, விதிமீறல் போலக் கருதித் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையோடு நிறுத்திக்கொண்ட திமுக அரசின் போக்கு வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். படுகொலைக்கு சாட்சிகளும், ஆவணங்களும் இருந்தும்கூட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் திமுக அரசின் செயல்பாடு மிகப்பெரும் மோசடித்தனமாகும்.
Tags :