75–வது சுதந்திர தினம்: சட்டசபையில் 14–ந் தேதி நள்ளிரவு சிறப்பு விழா
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு விழாவை நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழக சட்டசபையில் 13ந்தேதி காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 14ந்தேதி காலையில் வேளாண்மை துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை இரண்டும் தமிழக சட்டசபையின் வரலாற்றில் நடக்கும் முதல் நிகழ்வாகும்.மேலும், தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள், வருகிற 14ந்தேதி நிறைவடைகிறது. நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
அந்த வகையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே இந்த தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 14ந்தேதி நள்ளிரவில் சட்டசபையில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
தமிழக கவர்னர் இந்த விழாவிற்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.நள்ளிரவில் விழா கொண்டாடும்போது, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதத்தில் மவுனம் அனுசரிக்கப்படும்.
மறுநாள் காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே முதன்முறையாகும். ஆக, பல சிறப்பு நிகழ்வுகள் ஒரு சேர வருவதால் இவற்றை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.
கடந்த 1972ம் ஆண்டு இந்தியாவின் 25- வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடுவதற்காக அப்போதிருந்த முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். இந்தியாவின் சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்ததால், சட்டசபையில் 25வது ஆண்டு விழாவை நள்ளிரவில் கொண்டாட வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்தார்.
அந்த விழா தொடர்பான நிகழ்வு, சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘ஆகஸ்ட் 14ந் தேதி நள்ளிரவில் 25வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்), சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.கள்) பங்கேற்றனர். தமிழக கவர்னர், முதலமைச்சர் சபாநாயகர், மேலவைத் தலைவர், சட்டசபை முன்னவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
நள்ளிரவு ஆனதும் சட்டசபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மவுனம் காத்தனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல 1987 ம் ஆண்டிலும் 40வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
Tags :