3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது

by Editor / 22-08-2021 06:02:06pm
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது

 

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டசபை நாளை (23 ந்தேதி) மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் 13 ந் தேதி சட்டசபை கூட்டம் துவங்கியது. அன்றைய தினம் தமிழக பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்டை முதல் முறையாக 14- ந்தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து 16 ந்தேதி முதல் 4 நாட்கள் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 18 ந்தேதி சட்டசபை தொடங்கியபோது கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக பேச அனுமதி அளிக்காததால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே தரையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 19 ந்தேதி அன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஊழல், வசூல், பழிவாங்குதல் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் தி.மு.க. அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை விளக்கி, மனு அளித்தனர். அண்ணா தி.மு.க.வினர் 2 நாட்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

மொகஹரம், ஓணம் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு விடுமுறைவிடப்பட்டது.

நாளை சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதில் நீர்வளத்துறை மீதான விவாதத்தில் தி.மு.க., அண்ணா தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசவுள்ளனர். இந்த விவாதங்களுக்கு அவை முன்னவரும், துறையின் அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளார்.

இதன்பின்பு, செவ்வாய்க்கிழமை (24 ந்தேதி) உள்ளாட்சித் துறை, புதன்கிழமை (25 ந்தேதி) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வியாழக்கிழமை (26 ந்தேதி) உயர்கல்வி, பள்ளிக் கல்வி, வெள்ளிக்கிழமை (27 ந்தேதி) நெடுஞ்சாலைகள், கட்டடங்கள் (பொதுப்பணி) துறை மீதான விவாதங்களும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. சனிக்கிழமை (28 ந்தேதி) வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அப்போது அந்தந்த துறை அமைச்சர் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via