சென்னையில் விதிமுறைகளை மீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்

by Editor / 22-08-2021 06:00:04pm
சென்னையில் விதிமுறைகளை மீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விதிமீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் கையாளப்படுகின்றனவா எனவும் பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள், உணவகங்களில் உள்ள உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களுக்கான சேமிப்பு வசதிகள், மூலப்பொருட்களை சேமிக்கும் இடங்கள், குளிரூட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் உட்பட பல்வேறு வகையான உணவு சேமிப்பு முறைகள் மற்றும் சமைக்கும் உணவகங்களில் மக்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உயிரினங்களன நாய், பூனை, எலி நடமாட்டம் குறித்தும், உணவு சமைக்கும் இடங்கள் மற்றும் பாத்திரங்கள் துாய்மையாக பராமரிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

கடந்த 19 ந் தேதி அன்று அனைத்து மண்டலங்களில் உள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வுணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிக்க முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு உணவகங்களின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 8 உணவகங்களில் உடல்நலத்திறகு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ. 52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via