கன்னியாகுமரியில்  3 நாட்கள் படகு போக்குவரத்து 4 மணிநேரம் நீட்டிப்பு.

by Editor / 04-01-2023 07:47:28am
கன்னியாகுமரியில்  3 நாட்கள் படகு போக்குவரத்து 4 மணிநேரம் நீட்டிப்பு.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் நடுவே பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது(தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது) இவற்றை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுமரியில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் சீசன் என்பதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் படகில் ஆர்வத்துடன் சென்று பார்த்து
வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகையும், அதையொட்டி தொடர் விடுமுறையும் வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்காக படகு போக்குவரத்து 4 மணி நேரம் நீட்டிக்கப்படுவது வழக்கம். அதன்படி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் படகு போக்குவரத்து 4 மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கு நிறுத்தப்படுவதற்கு பதிலாக மாலை 6 மணி வரையும் படகு போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் கூடுதலாக படகுகள் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

Tags :

Share via