7 சார்பதிவாளர்கள் உட்பட  30 அலுவலர்கள் மாற்றம்

by Editor / 07-08-2021 04:01:56pm
 7 சார்பதிவாளர்கள் உட்பட  30 அலுவலர்கள் மாற்றம்


ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறையினரால் பதிவுத்துறை அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனைகளை அடுத்து 7 சார்பதி வாளர்கள் உட்பட 30 அலுவலர்கள் இடமாற்றப்பட்டிருக்கிறார்கள்.


பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் வெளிபடைத் தன்மையுடன் நடைபெறுகின்றனவா என்பது பல்வேறு வகைகளில் கண்காணிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய அலுவலகங்களின் அலுவலர்கள் கூர்நோக்கற்ற வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அத்துறையினரின் ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட குன்றத்தூர், மேட்டுப்பாளையம், ரெட்ஹில்ஸ், தேவகோட்டை, பாபநாசம், சோளிங்கர், சின்னமனூர், கறம்பக்குடி, ஓசூர், கடையநல்லூர், நிலக்கோட்டை, போடிநாயக்கனூர், அந்தியூர், திருச்செங்கோடு, மணப்பாறை, விளாத்திக்குளம், மன்னார்குடி, தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், வல்லம் (திண்டிவனம்) ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 7 சார்பதிவாளர்கள், 15 உதவியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 6 அலுவலக உதவியாளர்களைக் கூர்நோக்கற்ற பணியிடங்களுக்கு மாற்றி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத்துறையின் நேர்மையான செயல்பாடுகளை உறுதிப்படுத்த செய்யப்படும் பல்வேறு சீர்திருத்தங்களில் ஒரு பகுதியாக இம்மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories