ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க உடன்பாடு

by Editor / 13-09-2021 10:07:41am
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க  உடன்பாடு

தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.

கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது.

இதனால், ஈரான் தனது கண்காணிப்புப் பணியைத் தடுப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை புகார் கூறியது.

அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. தங்களது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று கூறுகிறது.

கண்காணிப்பு உபகரணங்கள் குறித்த பேச்சுவார்த்தை தடைபட்டிருந்தால், சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸி இந்த வாரம் தெஹ்ரானுக்குச் சென்றார்.

இந்த பயணத்தின் போது, ​​ஈரானின் அணுசக்தி முகமையின் புதிய தலைவர் முகமது எஸ்லாமியை அவர் சந்தித்தார்.

இரு தரப்பினரும் சந்திப்பு "ஆக்கபூர்வமானது" என்றும், அடுத்த மாதம் வியன்னாவில் நடைபெறும் அணுசக்தி முகமை பொது மாநாட்டில் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் கூறினர்.

தெஹ்ரான் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையே 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சர்வதேச தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, சில அணுசக்திப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டது.

ஆனால் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் 2018 ஆம் ஆண்டு முதல் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டில் இருந்து விலகி, அமெரிக்கத் தடைகளைப் புதுப்பித்தார்.

இதற்குப் பதிலடியாக, அணு ஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான தரத்தில் யுரேனியத்தை செறிவூட்டுவது போன்ற ஒப்பந்தத்தின் பல முக்கிய கட்டுப்பாடுகளை ஈரான் மீறியது.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஆகஸ்டில் பதவியேற்ற ஈரான் அதிபர் எப்ராஹிம் ரையீசி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தன.

ஈரான் மீதான "சட்டவிரோத" அமெரிக்க தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான "எந்த ராஜீயத் திட்டங்களையும்" ஆதரிப்பதாக ரையீசி கூறியுள்ளார்.

அணுசக்தி முகமையின் இரு ரகசியஅறிக்கையில் கசிந்த பிறகே ஈரான் மற்றும் அணுசக்தி முகமை இடையேயான உடன்பாடு கையெழுத்தாகி இருக்கிறது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் விவகாரத்தில் ஈரான் முன்பு ஒத்துழைக்கத் தவறியதாக அறிக்கைகள் தெரிவித்தன.

பல பழைய, அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனியத்தின் தடயங்கள் ஏன் காணப்பட்டன என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை என்றும் அந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.

 

Tags :

Share via