குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் பரிசளித்த 7 புத்தகங்கள்:

by Editor / 03-08-2021 02:48:11pm
குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் பரிசளித்த 7 புத்தகங்கள்:

 


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் ஏழு புத்தகங்களை பரிசாக கொடுத்துள்ளார். அந்த புத்தகங்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.


உலகப் பொதுமறையாம் 'திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பினையும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கினார். அடுத்ததாக, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் நிகழ்வுகளையும், அதில் பின்னிப் பிணைந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் ரத்தமும், சதையுமாக பதிவு செய்துள்ள சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலத்தில் Along with the sun என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் 'கரிசல் கதைகள்' புத்தகமும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை உரக்கப்பேசும் ராஜம் கிருஷ்ணன் எழுதிய, 'சுழலில் மிதக்கும் தீபங்கள்' எனப்படும் LAMPS IN THE WHIRLPOOL என்ற மொழி பெயர்ப்பு புத்தகமும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
 
நாட்டின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றான நீல.பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவல் Generation என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது. மூன்று தலைமுறைகளுக்கு இடையேயான கருத்து பரிமாற்றங்கள் குறித்து பேசும் நாவல் இது. அந்த நாவலும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.


ஆண், பெண் உறவு, அதில் உள்ள சிக்கல்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை இளம் வயதில் கவனிக்க வேண்டிய இளைஞன் எதிர்கொள்ளும் சவால்கள் என தி.ஜானகிராமன் எழுதிய 'செம்பருத்தி' என்ற நாவல் கிரிம்சன் ஹைபிஸ்கஸ் என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாவலை முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து, கே.ராஜன் ஆங்கிலத்தில் எழுதிய 'பண்டைய எழுத்து முறை' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தில் பரிசாக அளித்தார்.

 

Tags :

Share via