கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 13-09-2021 02:33:16pm
கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பும், வழிகாட்டுதலும் வழங்கச் சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும் எனக் கூறினார். அதுமட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க கைப்பேசி செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக 10 காவல் நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்க வசதிகள் செய்து தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மேலும், கடந்த ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 5 சவரன் வரை அடகுவைத்துப் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த தள்ளுபடி செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.மேலும், இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31-ம் தேதிவரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via