புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை

by Editor / 01-09-2021 07:31:53pm
புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை

சட்டப்பேரவையில் (செப்.1) மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய வந்தவாசி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்பேத்குமார், ”இனிவரும் காலங்களில் குடிசை மாற்று வாரியம் மூலமாகவோ, வீட்டு வசதி வாரியம் மூலமாகவோ கட்டப்படுகின்ற வீடுகள் முறையாக ஆய்வு செய்து அதற்கான ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்த பின்பே கட்டுவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

முகலிவாக்கம் சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஆய்வறிக்கை செய்யாததே. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியாட்கள் பற்றாக்குறை காரணமாகக் குறிப்பிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு பணிகள் தொடங்க தாமதமாகிறது. இதனை ஒழுங்குப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கி நிற்கிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், "புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்வதற்காக (என்.ஐ.டி) தேசிய தர கட்டுப்பாட்டு நிறுவன அலுவலர்கள் 11 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்து இன்னும் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

 

Tags :

Share via