ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்வில்லை - செரீனா வில்லியம்ஸ்
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் பட்டியலில் தான் இல்லை என்று அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். 39 வயதான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவுக்காக 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் லண்டன் 2012 ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :