சென்னையை குளிர்வித்த மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இன்று (ஜூன் 28) அதிகாலை பெய்த மழை குளிர்வித்தது. வாரத்தின் முதல் மிதமான மழை வரவேற்றுக் கொடுத்தது சென்னை நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில், "இரண்டு மணி நேரமாக மழை. மழை மேகங்கள் மெல்ல நகர்ந்து தற்போது (இப்பதிவைப் பதிவிடும் போது மணி அதிகாலை 4) சென்னைக்கு மேல் நிற்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு" எனப் பதிவிட்டிருந்தார்.
வங்கக் கடலில் அல்லது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் சின்னம் எதுவும் இல்லாத சூழ்நிலையில் இந்த மழை பெய்வதற்கு வெப்பசலனமும் காற்றின் திசை வேகம் மாற்றமும் காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் மழை தொடரும் என அறிவித்திருக்கிறது. அடுத்த 2 மணி நேரத்துக்கு நகரின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடேலார மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல இடங்களிலும் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் நாளையும் நாளை மறுநாளும் (29, 20 தேதிகளில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :