இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல்தான்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு.

by Editor / 21-08-2024 11:40:57pm
இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல்தான்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு.

மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ,10 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ,10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும். ஆனால் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இருப்பிமும் ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

அதற்கு பதிலளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவை மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் கிடையாது. அதே போல் மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீத கட்டணம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

இதுவரை 2 மாதத்தில் 1,275-க்கும் மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு ரூ,10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார அலுவலக கவுண்ட்டர்களில் காசோலை, டி.டி. அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வந்தனர். அவர்கள் ரொக்கமாக செலுத்த முடியாத நிலை இருந்தது.

ஆனால் இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு தான் 820 யூனிட். மற்றபடி வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு இந்த யூனிட் இன்னும் குறையும்.

 

Tags : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு.

Share via