அரும்பாக்கத்தில் தங்கியிருந்த எஸ்பிஐ கொள்ளையர்கள்

by Editor / 28-06-2021 09:41:39am
 அரும்பாக்கத்தில்  தங்கியிருந்த எஸ்பிஐ கொள்ளையர்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்களில் வினோதமான முறையில் சமீபத்தில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வட மாநிலங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் முதலில் அமீர் என்ற கொள்ளையனும், அதன் பிறகு வீரேந்தர் என்ற கொள்ளையனும், பிடிபட்டனர். இருவரும் தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொள்ளையர்கள் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்துதான் கொள்ளை சம்பவத்தை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கூகுள் மேப் மூலம் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்கள் எங்கெல்லாம் உள்ளன என தெரிந்துகொண்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் மூலம் சென்னை வந்து முதலில் கோடம்பாக்கம் சென்ற கொள்ளையர்கள் செல்போன் செயலி மூலமாக இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து அதனை பயன்படுத்தி உள்ளனர். கொள்ளையடித்த ரூபாய் 20 லட்சத்தை கையில் எடுத்துச் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று எண்ணிய கொள்ளையர்கள் தரமணியில் உள்ள கோடாக் வங்கி டெபாசிட் ஏடிஎம் மூலமாக ஹரியானாவில் பணத்தை அனுப்பி உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் உள்ள அவருடைய தாயாரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளதாகவும் அவருடைய தாயார் அந்த பணத்தை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுத்தவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஹரியானாவில் கைதான இரண்டாவது கொள்ளையன் வீரேந்திரர் என்ற கொள்ளையனை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்த போலீசார் தரமணி காவல் நிலையத்தில் வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் 

 

Tags :

Share via