மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

by Editor / 22-11-2022 10:06:31pm
மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

சீர்காழி வட்டாரத்தில் பெய்த கனமழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மழையால் சேதமான பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். 

சீர்காழி அடுத்த திருவாலி,நாராயணபுரம், மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டுப் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருடத்திற்கு மூன்று முறை முன்பெல்லாம் விவசாயிகள் சாகுபடி செய்த நிலையில் தற்போது அது கனவாகிபோனதால் அதனை விவசாயிகள்  மறந்து விட்டார்கள். வருடத்திற்கு ஒரு முறை தான் விவசாயிகள் நடவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பல சிரமத்திற்குப் பிறகு விவசாயிகள் சம்பா நடவு செய்த நிலையில் 44 சென்டிமீட்டர் கனமழை பெய்ததால் பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது.

மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும் அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க முடியும். கடந்த 11ஆம் தேதி மழை பெய்த நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் வந்து சேரவில்லை என கூறினார்.

அத்துடன், தொடர் மழையால் வீடுகள், விவசாயம், மீனவர்கள், இறால் குட்டைகள் என அனைத்தும் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 5ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100% இன்சூரன்ஸ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும் பேசினார்.

மேலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மின் மோட்டார்கள் உழவு இயந்திரங்கள் தொடர்பாகக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 30,000 வழங்க வேண்டும். நடவு பணிகளுக்காக விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அத்துடன், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன் வர வேண்டும். மழை நீர் வடிவதற்கு முறையாகத் தூர்வார வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆறு, கும், ஏரி போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இது அரசுக்கு ஒரு பாடமாகவே இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணியைத் தொடங்கி இருக்க வேண்டும் முந்தைய ஆட்சியைப் பற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. அவர்கள் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் தி.மு.க வை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றத்துடன் உள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
 

Tags :

Share via