ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில் (38). இவரது 2 வயது மகன் ஆரோன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அனில் ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு, அதன் பிறகு அவரால் நடக்க முடியாமல் உள்ளார். வீட்டில் அவரது மனைவி அருணா பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஆரோன் சமையலறைக்குள் சென்று அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அதை ஜூஸ் நினைத்து குடித்துள்ளார். குடித்த சில நிமிடத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாயார் அருணா ஓடி வந்து உடலில் மண்ணெண்ணெய் நாற்றம் வீசியதால் மண்ணெண்ணெய் சிந்தியிருக்கலாம் என்று உடையை மாற்றியுள்ளார். ஆனால் அதற்குள் ஆரோன் திடீரென வாந்தி எடுத்த போது மண்ணெண்ணெய் குடித்தது தெரிந்தது.
உடனடியாக தமிழக கேரள எல்லைப் பகுதியான காரகோணத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆரோன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :