ஒலிம்பிக் குத்துச்சண்டையில் கியூபா சாதனை,

by Editor / 01-07-2021 08:13:22pm
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் கியூபா சாதனை,

 

ஒலிம்பிக் குத்துச்சண்டை அரங்கில் கியூபா நிகழ்த்தியுள்ள சாதனைகள் மலைக்க வைப்பவை. திறமைவாய்ந்த சுமார் 20 ஆயிரம் குத்துச்சண்டை வீரர்கள் கியூபாவில் உள்ளனர். சுமார் 500 பயிற்சியாளர்கள் 185 மையங்களில் பயிற்சி கொடுத்துகொண்டு இருக்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமாக 12 வீரர்களே இடம்பெற முடியும் என்ற நிலையில், இத்தனை வீரர்களை அந்த நாடு உருவாக்கியது ஆச்சரியமே.

இத்தனைக்கும் குத்துச்சண்டை ஒன்றும் அந்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு கிடையாது. 1909ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற்ற காட்சி மற்றும் தொழில்முறையிலான போட்டிகளே, அந்நாட்டினருக்கு குத்துச்சண்டை மீது இத்தனை ஈர்ப்பை ஏற்படுத்தியது. புதுபுது யுத்திகள், எதிர்த்து போட்டி இடுபவரை இலகுவாக தாக்கி வீழ்த்தும் பாணியென அந்நாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்தனர்.

ஒரு காலக்கட்டத்தில் போட்டிகளின்போது வெள்ளையர்களுக்கும், கருப்பர்களுக்கும் நடைபெற்ற மோதல் காரணமாக குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது என்றாலும் குத்துச்சண்டை மீதான அந்நாட்டு மக்களின் ஆர்வத்தை கண்டு அரசே அந்த தடையை நீக்கியது. இதன் காரணமாக ஒலிம்பிக்கில் 37 தங்கம், 19 வெள்ளி, 17 வெண்கலம் என 73 பதக்கங்களை வென்று அதிக பதக்கங்களை வென்ற நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது கியூபா. இந்த பட்டியலில் 50 தங்க பதக்கங்களுடன் அமெரிக்க அணி முதல் இடத்தில் உள்ளது.

அரசியல் காரணங்களால் சில ஒலிம்பிக் போட்டிகளை கியூபா தவிர்த்தது. இல்லையென்றால் இன்னும் அதிக பதக்கங்களை வென்று இருக்கக் கூடும் அந்த அணி. முந்தைய ஒலிம்பிக் போட்டிகளிலும் 3 தங்கம், 3 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது. அந்த பட்டியலில் உஸ்பெகிஸ்தான் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது. இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கும் 7 வீரர்களுடன் கியூபா அணி களம் இறங்க உள்ளது. 

 

Tags :

Share via