தமிழகத்தில் குறைந்த வட்டியில்  ரூ.30 லட்சம் வரை கடனுதவி

by Editor / 02-07-2021 08:07:56pm
தமிழகத்தில் குறைந்த வட்டியில்  ரூ.30 லட்சம் வரை கடனுதவி

 

தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு கடன் உதவி:

தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக சிறுபான்மையின மக்களுக்கு இரண்டு திட்டங்கள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. கல்விக் கடன், சுய உதவி கடன், சிறு தொழில் கடன் போன்ற கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் 1ல் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000 த்திற்குள் இருத்தல் வேண்டும்.

மேலும் திட்டம் 1 ல் 6 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ல் 8 சதவீத வட்டியுடன் பெண்களுக்கு மட்டும் 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூபாய் 30 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதம் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவி குழுக்களுக்கு ஆண்டுக்கு ஒரு நபருக்கு 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ல் மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியில் 30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கபடுகிறது. எனவே தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடன் பெற தேவையான ஆவணங்கள் :

மத சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, திட்ட அறிக்கை , தொழில் கடன் பெறுவோராயின் தொழில் குறித்த விவரங்கள், இருப்பிட சான்று, கல்வி கடனுக்காக விண்ணப்பிப்பவர் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டண ரசீது, மதிப்பெண்கள் சான்றிதழ், ஆகியவை அவசியமாகும்.

 

Tags :

Share via